அலங்காரம் செய்துகொள்ள கண்ணாடி முன் அமர்ந்தவள் வயிற்றில் கையை வைத்துக்கொண்டு வயிறு அதிகப்படியாய் விரிவடைந்ததால் ஏற்பட்ட வரி தழும்புகளை வருடிக்கொண்டு தீவிர சிந்தனையில் ஆழ்த்திருந்தாள். வினோத நிகழ்வுகளை நினைத்து குழம்பிக் கொண்டிருந்தாள். அவளது சிந்தனையை கலைத்தது வெற்றியின் கம்பீரக் குரல். அவனது தோற்றத்திலும் அதே கம்பீரம் பொருந்தி இருந்தது.
“என்ன குந்தவி இன்னும் தயார் ஆகாம இருக்க?”
“இதோ ஒரு பத்து நிமிஷத்துல தயாராயிடுவேன் வெற்றி”
அவள் உள்ளக் குமுறல்களை வெற்றி அறிந்தே இருந்தான். அவள் அருகே சென்றான்.
“அம்மா அப்பா வரலையே அப்படினு தானே யோசிச்சிட்டு இருக்கே சீக்கிரமே உன் மனசை புரிஞ்சிப்பாங்க”
“ஹூம் புரிஞ்சிப்பாங்க, ஆனா எனக்குள்ள வேறுஒரு சிந்தனை ஓடிட்டு இருக்கு”
“என்ன”
“எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து அடிக்கடி ஒரு சில கெட்டகனவு வரும். வயித்தில புள்ளையோட தனியா சுத்துறமாறியும் அம்மா அப்பா புறக்கணிக்குற மாதிரி ஒரு கனவு. வீட்டுக்கு தெரியாம கருவுற்று இருக்குற போலவும் அதை வீட்டுல சொல்ல பயப்படறது போலவும் கனவு வந்து இருக்கு வெற்றி”
அவள் சொல்வதை கேட்டு வெற்றி சற்று அதிர்ந்தே போனான்.
“அதே போல இன்னைக்கு எனக்கு வளைகாப்பு. அப்பாவும் அம்மாவும் என்னை வெறுத்து ஒதிக்கிட்டாங்க பாத்தியா”
“இதெல்லாம் தற்செயல் கண்டதை யோசிக்காதமா சட்டுனு தயாராகு” குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு ஆறுதலாய் பார்த்துவிட்டு சென்றான்.
அப்படி ஒரு அன்பான கணவன் தனக்கு கிடைத்ததை எண்ணி பூரித்து போனாள். தன் மாநிற மேனிக்கு அதிக ஒப்பனை செய்யாமல் கண் மை மட்டும் இட்டுக்கொண்டு வட்ட வடிவமாய் மல்லிப்பூ வைத்து மஞ்சள் நிற பட்டுபுடவையில் வெளியே வந்தாள். வெற்றியை நிலைகுலைந்து போகவைக்க அது போதுமானதாக இருந்தது.மெய் மறந்து நின்ற அவனுக்கு குந்தவியின் ஸ்பரிசம் நினைவை ஊட்ட அவள் கை பிடித்துச்சென்று இருக்கையில் அமரவைத்தான்.
தன் மனைவியின் ஆசைக்காக தனக்கு தெரிந்ததை கொண்டு வளைகாப்புக்கு ஏற்பாடு செய்திருந்தான். பெரியவர்கள் இல்லை சம்பிரதாய முறைகள் இல்லை முக்காலிகள் இல்லை. சந்தனமிட்டு அவளுக்கு வளையல் அணிவித்துவிட்டனர் வந்திருந்த இளைய நண்பர்கள். தனக்கு தாய் தந்தையர் இல்லையே என சிறு ஏக்கம் தோன்றி மறைந்தது வெற்றியின் கண்ணில்.
வந்தவர்களில் பலர் விருந்துண்ணுவிட்டு கலைய குந்தவியின் கல்லூரி தோழி வினோதினி அவளுடன் தனியே பேச அறைக்கு அழைத்து வந்தாள்.
“என்ன வினு என்ன பேசனும் உனக்கு?”
“ஏன் அப்பாவும் அம்மாவும் வரல? என்ன பிரச்சனை வெற்றி மேல ஏதும் கோவமா?
“இல்லை என் மேல கோவம் என்னோட முடிவுகள் மேல”
“குந்தவி புரியுரமாதிரி சொல்லு”
” வினு உனக்கு சில விஷியங்கள் தெரியாது சொல்றதுக்கான நேரமும் அப்போ அமையல”
“சரி அதை இப்போ சொல்லு”
“நான் வேலை பாத்துட்டு இருந்த மருந்து தொழிற்சாலை உனக்கு தெரியும்ல?”
“ஆமாம் தெரியும்”
“என் வாழ்க்கையோட எல்லா பிரச்சனையும் அங்கதான் உருவாச்சு”
தன்னையும் மறந்து வினோதினிக்கு அந்த நிகழ்வுகளை விவரிக்க தொடங்கினாள் குந்தவி. சென்னை நகரின் எல்லையில் அமைத்திருந்த சுகாதாரத்துறை அமைச்சருக்கு சொந்தமான மருந்து தொழிற்சாலையில் கணக்காளராக பணிபுரிந்து வந்தாள் குந்தவி.
அலுவலகத்தில் மதிய உணவிற்காக தனியறையில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு பேசி கொண்டிருந்தனர் அங்கே பணிபுரிவோர். தாமதமாக வந்த குந்தவி அவர்கள் வாக்குவாதத்தில் சிறு பகுதியே கேட்டாள்.
“பொண்ணுங்களுக்கு அதெல்லாம் புரியாது சாந்தி” என்று குணா சொன்ன சொற்கள் கேட்க குந்தவி கோபத்துடன் அருகே சென்றாள்
“அப்படி என்ன பொண்ணுங்களுக்கு தெரியாத புரியாத விஷயம் உனக்கு புரிஞ்சது கொஞ்சம் சொல்லேன் குணா” அவள் வார்த்தையில் மறைந்திருந்த ஏளனத்தை அந்த அறிவியல் ஆராய்ச்சியாளன் உணரவில்லை.
“இப்போ ஜாதி பிரச்சனை எல்லாம் கிடையாதுல அதை பற்றி தான் பேசிட்டு இருந்தோம்”
“ஓ ! அப்படியா குறைந்து போச்சா எப்படி?”
“இப்போ எல்லாம் யாரும் ஜாதி பார்த்து பழகுறது இல்ல தீண்டாமலாம் குறைஞ்சி போய்டுச்சு”
“உன் ஜாதி என்னனு உனக்கு தெரியுமா ?”
“தெரியுமே”
“இங்க இருக்குற எல்லாருக்கும் தெரியும் அப்போ எப்படி குறையும் சொல்லு, அது மறைந்து போகணும் எல்லாரோட நினைவுல இருந்தும் மறந்து போகணும்”
“என்ன முட்டாள் தனமா பேசுற நீ குந்தவி அது எப்படி முடியும்” இந்த பதில் அவள் கோவத்தை இன்னும் அதிகம் கிளறி விட்டது
“இதுக்கு முன்னாடி சைவம் வைணவம்னு தனியா இருந்த சமயம் இப்போ ஒரு சமயமா மாறி இருக்கு, யாரு எந்த சமயம்னு மறந்து போகலையா என்ன மதம்னே தெரியாம ஊருக்குள்ள குலதெய்வம் கும்பிட்டுட்டு இருந்தவர்களுக்கு ஒரு மத சாயம் பூசலியா அது போல ஜாதிய மறக்க வெக்க இந்த அரசால முடியாதுனு நினைக்குரிய”
சற்று ஆடிப்போனான் குணா அவள் சொல்வதை அனைத்தையும் உள்வாங்கிக்கொள்ள முடியாமல் திகைத்தான்.
“நீ சம்மந்தமே இல்லாம பேசுற எனக்கு பதிலுக்கு பேசனும்னு உலராத குந்தவி ஜாதி பார்க்குறது குறைந்து போச்சுன்னு தான சொன்னேன்”
“அப்படியா? ஏதோ ஒரு ஊருல எவனோ ஜாதி மாற்றி கல்யாணம் பண்ணா ஊருக்கு முன்னாடி அமைச்சர் வீர பாண்டியன் இந்த தொழிற்சாலை முதலாளி உன் சொந்த மாமா அந்த இடத்துக்கு போறாரு போன ஒரே நாள்ல கலவரம் வருது அந்த காதலர்கள் செத்து போறாங்க, ஏன்? ஜாதி அரசியல் இன்னுமா ஜாதி குறைந்து போய்டுச்சுன்னு நினைக்கிற”
“தேவை இல்லாம என் மாமா பற்றி தப்பா பேசாத”
அவனை பார்த்து ஏளனப் புன்னகை புரிந்தாள் குந்தவி.
“முதல்ல இந்த அரசியலை நீ தெரிஞ்சிக்க அப்புறம் பொண்ணுங்களுக்கு நீ புரியவெக்கலாம் சரியா, போய் வாழ்க்கையை படி போ”
கோபத்துடன் முன்னேறிய அவனை உடனிருந்த சாந்தி கை அமர்த்தி அழைத்து சென்றாள். அவன் கண்ணில் தோல்வியால் ஏற்பட்ட குரோதம் வழிந்தது.
“இந்த சம்பவம் தான் வினு என் பிரச்சனை மொத்தத்துக்கும் காரணம்”
“இப்படி பாதில சொன்ன எப்படி அதுக்கு அப்புறம் என்னாச்சு”
“அந்த வருஷம் அதிக வருமானம் ஈட்டுனதுக்காக ஒரு பார்ட்டி நடந்தது.அதுக்கான ஏற்பாடு எல்லாம் அலுவலகத்துல நான், குணா, பிரவீன் அப்புறம் இன்னும் இரண்டு பேரு செஞ்சோம். மாடியை சுத்தம் பண்ணும்போது குணா கொண்டுவந்த தகரம் என் கையை கிழிச்சது.சின்ன காயம் தான் இருந்தாலும் துருபிடிச்ச தகரம் நல்லது இல்லனு டீடீ அப்படினு சொல்லி குணா ஊசி போட்டான்.”
“அதுக்கு அப்புறம் என்னாச்சு குந்தவி”
“அதுக்கு அப்புறம் எனக்கு என்ன ஆச்சுன்னு நினைவு இல்ல, கண்ணுமுழிச்சி பார்க்கும் போது நான் ஒரு அரசு மருத்துவமனையில இருந்தேன் அம்மா என் பக்கத்துல உட்கார்ந்து அழுதுட்டு இருந்தாங்க. எதுக்கு மா அழுவுறேன்னு கேட்டேன் பதில் சொல்லாம அழுதாங்க எனக்கு அதை பார்த்து துக்கம் தொண்டையை அடைச்சது எதுவும் புரியல பக்கத்துல இருந்த வெற்றி தான் வந்து சொன்னான், என்னை யாரோ துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் பண்ணிருக்காங்கனு, ஆனா எனக்கு எதும் நினைவுல இல்ல”
குந்தவியின் முகம் உணர்ச்சியற்று இறுகிக்கிடந்தது. எந்த சலனமும் அதில் இல்லை. வினோதினி நேர்மாறான உணர்ச்சிகளுக்கு ஆளாகினாள் அவளை அறியாமல் கண்ணில் நீர் வழிந்தது.
“போலீஸ்ல கிட்ட போகலையா” வினோதினியின் வார்த்தைகள் தடுமாறியது.
“போனோம் ஆனா அமைச்சர்க்கு சொந்தம் பெருசு பண்ணவேணாம்னு அனுப்பிட்டாங்க, கொஞ்ச நாளைக்குள்ள குணாவுக்கும் எங்க கூட வேலை செஞ்ச சாந்திக்கும் கல்யாணம்னு தகவல் வந்தது. நிறைய கோபம் வந்துச்சு ஆனா எதுமே செய்ய முடியல. நான் நிலைகுழைஞ்சி போக கூடாதுனு எனக்கும் வெற்றிக்கும் அவசர அவசரமா கல்யாணம் பண்ணிட்டாங்க அம்மாவும் அப்பாவும்”
“ஆனா ஏன் அவங்க இன்னைக்கு வரல என்ன நடந்துச்சு”
“கல்யாண ஏற்பாடுடலாம் நல்லபடியா நடந்துட்டு இருந்தது சரியாய் கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி தான் தெரிஞ்சுது நான் கருவுற்று இருக்கேன்னு”
வினோதினி அதிர்ச்சியில் உறைந்தே போனாள்.
“அதான் உனக்கு வைத்தியம் பன்னங்களே அப்புறம் எப்படி?”
“அந்த மருத்துவமனையோட தப்பு, ஒரு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நபருக்கு கொடுக்க வேண்டிய சரியான சிகிச்சையை கொடுக்கல”
“நீ என்ன முடிவு பண்ண”
“அம்மா அந்த குழந்தை வேண்டாம்ன்னு சொன்னாங்க ஆனா எனக்கு மனசு இல்ல இந்த குழந்தை ஏத்துக்கனும்னு முடிவு பண்ணிட்டேன். இப்படி பட்ட பொண்ணு வேணாம்னு கல்யாணம் முடிச்சி போனவங்க இன்னும் ஒரு வார்த்தை பேசல”
“வெற்றி ?”
“என்னோட எல்லா முடிவுகளையும் ஆதரிச்சான் கூடவே இருக்கான், இதுதான் காதல்னு சொல்லாம சொல்லிட்டான்.” இறுகி இருந்த முகத்தில் வெற்றியின் காதல் நினைவுகள் புன்னகையை சூட்ட, கண்கள் தன் பங்கிற்கு நீர்துளிகளை இறைக்க கன்னத்தில் வழிந்த கண்ணீர் முத்துக்கள் அவளுக்கு அழகையே சேர்த்தது.
பேசிக்கொண்டே இருந்தவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.வெற்றியும் விநோதினியும் அவளை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனை சென்றடைந்த கால்மணி நேரத்திற்குள் கருப்பு நிற காரில் இருவர் அங்கு வந்து நேரே தலைமை மருத்துவர் அறைக்கு சென்றனர்.
“குழந்தை பிறந்துருச்சா” என்றாள் சாந்தி.
” இன்னும் இல்ல மா” தயக்கத்துடன் வந்தது மருத்துவரின் பதில்.
“ஏற்கெனவே சொன்னது போல குழந்தை பிறந்து ஒடனே இறந்துருச்சுனு சொல்லிடுங்க அந்த குழந்தை எனக்கு வேணும்”
“அது எப்படி மா நாளைக்கு வெளிய தெரிஞ்சா ?”
“நாங்க யாருன்னு தெரியும்ல போங்க ஆகவேண்டியதை பாருங்க” மிரட்டும் தொனியில் வந்தது குணாவின் குரல்.
அமைதியே வெளியில் சென்ற மருத்துவர் சற்று நேரத்திற்குள் குழந்தையை யாரும் அறியா வண்ணம் கொண்டு வந்து ஒப்படைத்தார் .
குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சொல்ல அதை குந்தவியிடம் எப்படி சொல்லுவது என்று தெரியாமல் தயங்கிக்கொண்டிருந்தான் வெற்றி. இத்தருணத்தில் குந்தவியின் தாயிடம் நடந்ததை தெரிவிப்பதால் அவள் வந்து சமாதானம் செய்யக்கூடும் என்று எண்ணி அவளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவலை கூறினான். உடனே குந்தவியின் தாயார் கண்ணீருடன் மருத்துவமனைக்கு புறப்பட்டாள் குந்தவியை காண. ஒரு குழந்தை தாயை பிரிய மற்றொரு குழந்தை தாயுடன் மீண்டும் இணைய காத்திருந்தது.
குழந்தையை வாங்கிய குணாவும் சாந்தியும் எவரும் அறியாவண்ணம் காரை அடைந்தனர்.
“ஏன் சாந்தி இது சரியா ”
“உங்க பாவத்தை போக்க வேணாமா”
“மறுபடியும் சொல்றேன் இதுக்கு முழு காரணம் என் மாமா தான் நான் அவருகிட்ட குந்தவி பேசுனது சொன்னப்போ அவருதான் அவள எதுனா செய்யணும்னு சொல்லி அந்த திட்டமெல்லாம் போட்டாரு அவளுக்கு மயக்க ஊசி போட்டது முதற்க்கொண்டு அவரோட திட்டம் எனக்கு வேற வழி தெரியல நான் ஒரு கருவி மட்டும் தான்”
” ஆனாலும் நீங்க தான் அவள கொண்டுபோய் ஒப்படைச்சது, இது எல்லாம் நடக்க காரணமும் நீங்கதான். அவளுக்கு கல்யாணம்னு கேள்வி பட்டு எல்லா உண்மையும் சொல்லிடலாம்னு தான் அவ வீட்டுக்கு போன ஆனா உள்ள ஏதோ சண்டை நடக்குற சத்தம் கேட்டது திரும்ப வந்துட்டேன் இன்னொருநாள் அவங்க அம்மாவை தனியா பார்த்து பேசுனேன் ஆனா எந்த உண்மையையும் சொல்ல முடியல, அப்போதான் எனக்கு குழந்தை பத்தி தெரிஞ்சுது. அவங்க யாரும் குந்தவி கூட பேசுறது இல்லனு சொன்னாங்க கஷ்டமா போச்சு ”
“உண்மையை சொன்னா அவ நம்பவா செய்வா”
“அதான் அவளுக்கு இன்னும் கஷ்டம் வரக்கூடாதுன்னு குழந்தையை கொண்டு வந்துட்டேன். நல்லவேளை எதிர்பார்த்த மாதிரி அவ வழக்கமா வந்து போற மருத்துவமனைக்கே வந்தாங்க அதான் வேல சுலபமா ஆகிடுச்சு”
“இப்போ இந்த குழந்தைய வெச்சி என்ன பண்ணப்போறே எங்க மாமாவை பழி வாங்கபோறியா அதை தான யோசிச்சி வெச்சிருக்க?” ஏளனப் புன்னைகை புரிந்தான் குணா
“நான் நீங்க நினைக்குற அளவுக்கு முட்டாள் இல்லைங்க, இந்த குழந்தை வளர்ந்து முடிக்கும் முன்னே உங்க மாமா 60 65 வயசு கிழவன் அவரை பழிவாங்கி யாருக்கு என்ன பிரயோஜனம்? கருத்தியலோடவும் கொள்கைளோடவும் மோதுன நாலு பேருக்கு புரியும் நல்லது நடக்கும் ஒத்தை ஆள கொன்னு என்ன மாற்றம் வந்துட போது ? குந்தவிக்கு இந்த நிலைமை வர என்ன காரணம் சொல்லுங்க ?”
“இங்க நடக்குற அரசியலை தெரிஞ்சிகிட்டா தைரியமா பேசுனா. அவள யோசிக்க விடாம, அவள பேசவிடாம செய்யத்தான் இப்படி நடந்தது”
“அவ பேச நினைச்சதை இந்த குழந்தை பேசட்டுமே நல்ல கருத்தை விதைக்கட்டுமே எதுக்கு தனி நபரை பழி தீர்க்கணும்?”
அவள் சொன்னதில் உள்ள அர்த்தத்தை புரிந்து தலை அசைத்து காரை இயக்கினான். மாற்றத்திற்கான விதையுடன் அந்த கருப்புக் கார் பறந்து சென்றது.
-வானதி நெடுமாறன்
(குறிப்பு: படைப்பில் குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யவும். கருத்தியல் நபருக்கு நபர் மாறுபடும் கொள்கை முரண்பாடு ஏற்படலாம்.)
உங்களின் பின்னூட்டத்தை இடுங்கள். மேலும் உங்களின் பின்னூட்டம் யாரையும் காயப்படுத்தாதவாறு இருத்தல் வேண்டும்